2 வயது முதல் 18 வயது குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி | Covaxin recommended for children from 2 to 18 years

Spread the love

இரண்டு வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொள்ளை நோயான கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு பிரதானமாக செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவிய நிலையில், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும் என்பதில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, இந்த தடுப்பூசியை 18 வயதுக்கு மேல் அனைவரும் போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

Also Read : 10ம் வகுப்பு படித்தவர்கள் மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு | 10th Class Graduates Employment in Fisheries

அதன்படி, தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, கொரோனா மூன்றாவது அலை தொடர்பான எச்சரிக்கைகளும், மூன்றாவது அலை குழந்தைகளை அதிக அளவில் தாக்கக் கூடும் என்ற எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான தடுப்பூசி சோதனைகளுக்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டது.

அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை மேற்கொள்ள மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி வழங்கியது. மத்திய மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் இந்த ஒப்புதலை அளித்திருந்தது.

இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தடுப்பூசியின் 2 மற்றும் 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. 3ஆம் கட்டத்துக்கு செல்லும் முன்னர் 2ஆம் கட்டத்துக்கான பாதுகாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. இந்த பரிசோதனையின் முடிவுகளை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இரண்டு வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதியானது, அவசர கால அனுமதியாக வழங்கப்பட்டுள்ளது.

மற்ற கோவிட்-19 தடுப்பூசிகள் போன்று மல்டி டோஸ் குப்பிகளில் கிடைப்பது போலல்லாமல், குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசியானது முன் நிரப்பப்பட்ட ஊசி அல்லது பிஎஃப்எஸ் செயல்முறைகளில் பயன்படுத்தப்படும். முன்கூட்டியே நிரப்பப்பட்ட ஊசிகள் உயர்-நிலை துல்லியத்தைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து சீரம் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், கோவாக்சின் தடுப்பூசியை ஐசிஎம்ஆர், தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து தேசிய வைராலஜி நிறுவனம் தயாரித்து வருகிறது. இது இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசி என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *