தமிழகத்திலிருந்து நடைமுறையில் இருக்கும் இ-பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி தாக்கலான மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரத்தினம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், கொரோனா பரவலைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன்படி மக்கள் நெரிசலைக் குறைக்க மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும் இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது. இந்த நடைமுறையில் அத்தியவாசியத் தேவைக்குச் செல்வதற்காக இ-பாஸ் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு பாஸ் வழங்கப்படவில்லை. இதனால் பலர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி மன உளைச்சலில் உள்ளனர்.
திருமணம், இறப்பு மற்றும் மருத்துவக் காரணங்களுக்காக செல்வோர்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கின் போது இவற்றுக்குச் சான்றிதழ்கள் பெறுவதில் மிகுந்த சிரமங்கள் உள்ளன. எனவே இ-பாஸ் தொடர்பாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஜூலை 31-ல் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 16-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.